Cyclonic storm Fengal
கடந்த சில தினங்களாகவே வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (28.11.2024) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் நிலையில், நாளை (29.11.2024) காலை மணி 05.30 அளவில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கு "ஃபெங்கால்" என பெயரிடப்பட்டுள்ளது.இந்த புயல் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவின் கடலோர மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஃபெங்கால் புயல், நாளை மறுநாள் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெங்கால் புயல் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் மையப்பகுதியிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவு வரை பலத்த மழை பெய்யக்கூடும்.
இந்த புயலின் காரணமாக கடலோர மாவட்டங்கள், குறிப்பாக தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புயல் கரையை கடக்கும் போது கடல் சீற்றமும் ஏற்படும்.
இதனையடுத்து, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்கான உபகரணங்கள் மற்றும் படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஃபெங்கால் புயல் காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். கனமழை மற்றும் கடல் சீற்றத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடையக்கூடும். சாலைகள் மற்றும் இதர உள்கட்டமைப்புகளும் பாதிக்கப்படக்கூடும். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக்கூடும்.
எனவே, ஃபெங்கால் புயலின் போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். புயல் குறித்த சமீபத்திய தகவல்களைத் தொடர்ந்து பெற வேண்டும்.